சென்னை மாநகரக் காவல்துறையின் முன்னாள் ஆணையர் அருண், விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் காத்திருப்பில் வைக்கப்பட்டார். பின்னர், ஊழல் தடுப்பு காவல் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரின் மீதான இலஞ்ச ஊழல் வழக்குகளைக் கையாளும் பதவியில், கடந்த ஆட்சியில் தி.மு.க.வுக்குச் சாதகமாகச் செயல்பட்டவர் எனக் கூறப்படும் அருண் நியமிக்கப்பட்டது சரியா எனப் பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
அவரின் பதவியேற்புக்குப் பின்னர், அதே துறையில் ஆய்வாளர் நிலையில் ஒரு பெண் அதிகாரி மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தொடர்பாக அருண் மீது குற்றச்சாட்டும் எழுந்தது.
இடைநீக்கத்தை எதிர்த்து அந்தப் பெண் ஆய்வாளர் வழக்கு தொடுக்க, அது நீதித்துறையின் நடைமுறையில் உள்ளது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் வேலு மீது இலஞ்ச வழக்கு பதியப்பட்டு அவரின் வீட்டில் தேடுதல் சோதனையும் நடத்தப்பட்ட நிலையில், அவர் சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்குச் சென்றார்.
அவர் தப்பியோடிவிட்டதாக முதலமைச்சர் விஜய் பூடகமாக கரூர் கூட்டத்தில் பேசினார்.
ஆனால், சிங்கப்பூரிலிருந்து திரும்பிவந்த வேலு, தான் 2023ஆம் ஆண்டிலேயே அங்கு சிகிச்சை பெற்றதாகவும் தொடர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 17ஆம் தேதியன்றே பயணச்சீட்டை முன்பதிவு செய்தபின்னரே, பயண நாளான 25ஆம் தேதியன்று தேடுதல் சோதனை நடத்தினார்கள் என்றும் அதற்கு முழு ஒத்துழைப்பு தந்தபிறகே தான் சிங்கப்பூருக்குச் சென்றதாகவும் விளக்கம் அளித்தார்.
இது த.வெ.க. தரப்புக்கு சற்று பின்னடைவாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், அவருடைய வழக்கைக் கையாள்வதில் அருண் மீது அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதையொட்டி அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.