எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

தமிழக மீனவர்கள் படுகொலை... அக்கறை இல்லாத ஆட்சி- எடப்பாடி பழனிசாமி

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று சவுதியில் கொல்லப்பட்ட தமிழர் குறித்து அ.தி.மு.க. முன்வைத்த கவன ஈர்ப்புத் தீர்மானம் பற்றிப் பேச அக்கட்சியின் தரப்பில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு அனுமதி தராமல், நாளை விவாதிக்கலாம் என்று பேரவைத்தலைவர் பிரபாகர் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

" சட்டப்பேரவை விதி எண் 55-ன் கீழ் அ.தி.மு.க. தரப்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்து 5 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், மிக முக்கியமான இந்தத் தீர்மானத்தை 5 நாள்களாக எடுக்கவில்லை.

அந்தத் தீர்மான விவரம்:

12.08.2026 அன்று மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் ஊராட்சி, தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், சவுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களை ஈரானைச் சேர்ந்த கடல்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதில் 38 வயதான மாவீரனின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டதில் அவர் அப்பொழுதே உயிரிழந்துவிட்டார். மேலும், மீதமுள்ளவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவரவும், காயப்பட்டவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளித்து, அவர்களின் குடும்பத்திற்கு உரிய வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

- இதுதான் தீர்மானம்.

இந்த அரசாங்கம் தமிழர்களை காப்போம் என்று வாயளவில் தான் சொல்கிறார்கள்.

கடந்த காலங்களில், எங்கே தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுப்பதுதான், தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் தமிழக அரசின் கடமையாக இருந்தது. ஆனால், இந்த அரசாங்கம் தமிழர்களின் உணர்வை சிறிதுகூட பொருட்படுத்தாமல் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி தமிழர்களை காப்பார்கள்?" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram