தமிழ் நாடு

“அறைக்குள் முத்தமிட முயற்சி, காருக்குள் வைத்து... ”- கரு.நாகராஜன் மீது பாலியல் புகார்!

Staff Writer

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவர் தங்க சோபனா பாலியல் புகார் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரு.நாகராஜன், வலுக்கட்டாயமாக மிரட்டி தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை நாகராஜன் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக தங்க சோபனா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நான் 2018 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். அதன்பிறகு நடந்த காந்தி யாத்திரை என்ற கட்சி நிகழ்ச்சியில் கரு. நாகராஜன் என்னை சந்திக்கிறார். நாம் இருவரும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், எனவே உன் கைபேசி எண்ணைத் தா என்றார். நானும் கொடுத்தேன். ஒரு நாள் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோபனா உன்னை பார்த்தது முதல் ஏதோ உன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. நான் தனியாக இருக்கிறேன், நீ வரமுடியுமா என்றார்.

இரவு நேரத்தில் நான் யாரையும் சந்திக்கமாட்டேன் என்று கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்தேன். மேலும் என்னை பலமுறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார். நான் கமலாலயம் சென்றிருந்தபொழுது மாநில பொதுச் செயலாளராக கரு. நாகராஜன் இருந்த நேரத்தில் அவருக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் என்ற முறையில் மாவட்ட மகளிருடன் மரியாதை செலுத்த சென்றிருந்தபொழுது மரியாதை செலுத்திவிட்டு வெளியே வரும்பொழுது தங்க ஷோபனா நீ மட்டும் உள்ளே வா என்று அழைத்தார். நான் அறையினுள் சென்ற பிறகு பலவந்தமாக கையை பிடித்து இழுத்து முத்தமிட முயன்றார். நான் சுதாரித்துக் கொண்டு அவரது கன்னத்தில் அறைந்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தேன். கட்சியின் நலன் கருதியும், கட்சியின் வளர்ச்சி கருதியும், இந்த விவரங்களை பலரிடம் நான் எடுத்துக் கூறவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன்.

2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. கட்சியின் மாவட்ட தலைவர் சாய் சத்யன் அவர்கள் பெரு நகர சென்னை மாநகராட்சி 187வது வார்டில் நீங்கள் தான் போட்டியிடவேண்டும் என்று கூறினார். ஆனால், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த நம் கட்சியில் பொறுப்பாளர் ஸ்ரீதர் அவர்கள் கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத தனது மனைவி கிருஷ்ணபிரியா போட்டியிட வேண்டும் என்றும், இல்லையென்றால் நான் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்றார். கட்சியின் நலன்கருதி எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தேன்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் சோபனா

2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும், 2022ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் கிருஷ்ணபிரியா தோல்வி அடைந்தார். அதன்பிறகு மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் அவர்கள் "சோபனா" என்னை உடனே சந்திக்க வேண்டும் வா என்றார். கட்சி வேலை என்று நினைத்து நான் அவரிடம் சில மகளிரை சந்திக்கிறேன். பிறகு வருகிறேன் அண்ணா என்றேன். அதற்கு அவர் அண்ணா என்று கூப்பிடாதே. ஜி அல்லது சார் என்று கூப்பிடு என்றார். (கட்சியின் கார்யகர்த்தர்கள் அனைவரும் நீங்கள் ஜி என்று அழைக்க வேண்டாம். அண்ணா என்றுதான் அழைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் அனைவருக்கும் கட்டளையிட்டிருந்தார்)

கட்சியின் மிகவும் அவசரமான வேலை உடனே வரவேண்டும் இல்லையென்றால் உன் மீது நடவடிக்கை எடுப்பேன். கட்சியை விட்டு எடுத்துவிடுவேன் என்று மிரட்டினார். நானும் ஒன்றும் புரியாமல் கட்சி வேலை என்பதால் அவர் இருக்கும் இடத்திற்கு சென்றேன். அந்த சமயத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரமாக இருந்தது. அவர் உடனே காரின் உள்ளே வா என்றார். உன்னுடன் கட்சிப்பணி குறித்து பேச வேண்டும் என்றார். பிறகு தனது கார் ஓட்டுநர் அருணை பார்த்து நீ காரை விட்டு வெளியே நில் என்று கூறினார். நான் காரில் அமர்ந்தவுடன் சோபனா எனக்கு நீ இணக்கமாக இருந்திருந்தால் உன்னை நான் சென்னை மாநகராட்சி உறுப்பினராக ஜெயிக்க வைத்து மகாராணி போல் வைத்திருப்பேன் என்று கூறியபடி என் தொடையின் மீது கை வைத்து இறுக்கமாக கட்டி அணைத்து பலாத்காரம் செய்ய முயன்றார். நான் காரின் கதவை என் காலால் உதைத்து கரு. நாகராஜனையும் தள்ளிவிட்டு என் முழு பலத்துடன் போராடி வெளியே வந்து வீட்டிற்கு சென்று விட்டேன், பல மணி நேரம் அழுதேன்.

கட்சியில் என்னை விட பலவீனமான பெண்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால் இது போன்ற காமுகனிடம் இவர்கள் எப்படி சித்ரவதை அனுபவித்து இருப்பார்கள். மேலும் கட்சியை விட்டு சென்றிருப்பார்கள். எனவே, இதுபோன்ற காமுகனிடம் இருந்து கட்சியை காப்பாற்ற அவர் மீது நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் புகார் மனுவாக எழுதி, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் - முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்களிடமும் கொடுத்தேன். நடந்தவை அனைத்தும் உண்மைதான் என்று அறிந்து கொண்டோம். தக்க சமயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். இந்நாள்வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் கட்சியில் பல மாற்றங்கள், பொறுப்புகள் அனைத்தும் மாறின. நான் என் புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பல நாட்கள் காத்திருந்தேன். தற்சமயம், என்னை பார்க்கும்பொழுது கரு. நாகராஜன் "உன்னால் ஒரு மயிரும் பிடுங்கமுடியாது" கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு நாள் "பலான வேலைகளை" செய்து கொடுத்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை பயன்படுத்தி உன்னை இந்த கட்சியிலிருந்து ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று திமிருடன் கூறி வருகிறார்.

இம்மாதிரி பல பெண்களை கட்சி இழந்து கொண்டிருக்கிறது என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவே, என் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமல், பல பெண்களில் பாதுகாப்பை கருதி இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

கட்சியில் உச்ச பொறுப்பில் இருக்கும் கருநாகம் கரு. நாகராஜன் காமுகனே காரணம். எனவே, தமிழகத்தில் கடசி வளர்ந்திடவும், இதுபோன்ற கருநாகம் கரு. நாகராஜன் காமுகன் மாநிலத் துணைத்தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், மீண்டும் இந்த புகாரை தங்களுக்கும், கட்சியின் அகில பாரத பொருப்பாளர்களுக்கும், தேசிய தலைமைக்கும் மற்றும் மாநில தலைமைக்கும் எனது புகாரை பதிவு செய்கிறேன். தாங்கள் இந்த புகாரை பெற்று விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த குற்றச்சாட்டை கரு. நாகரஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார். “தன்னுடைய புகழுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கரு. நாகராஜன் கடிதம்