தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஏப்ரல் 24, 2026 அன்று பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 1,825 வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஆவணங்கள் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது.
தமிழகப் பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 4,023 வேட்பாளர்களுக்கும் சரிபார்ப்பு செயல்முறையில் பங்கேற்பதற்க முன்கூட்டியே விவரம் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 75,064 வாக்குச்சாவடிகளில், சரிபார்ப்பிற்குப் பிறகு எந்த ஒரு மறுவாக்குப்பதிவும் பரிந்துரைக்கப்படவில்லை.
மேற்குவங்கம், தமிழகம் இரு மாநிலங்களிலும் இந்த முழு செயல்முறையும் காணொளி பதிவு (videographed) செய்யப்பட்டது. சரிபார்ப்பிற்குப் பிறகு, படிவம் 17A மற்றும் தொடர்புடைய பொருட்கள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரின் (RO) முத்திரையிடப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (EVM-VVPATs) பொதுப் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறை, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அறையின் கதவுகள்/தாழ்வாரங்களில் சிசிடிவி (CCTV) கண்காணிப்பு உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ROs) பாதுகாப்பு அறைகளுக்கு ஒரு நாளில் இருமுறை நேரில் சென்று ஏற்பாடுகளைச் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (DEOs) தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்குத் தினமும் ஒருமுறையும், தலைமையகத்திற்கு வெளியே உள்ள அறைகளுக்கு 3-4 நாட்களுக்கு ஒருமுறையும் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள்.
பாதுகாப்பு அறைகளைக் கண்காணிப்பதற்காக, அந்த அறைகள் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தற்காலிக முகாம்களை அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் ப. பவன் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.