தமிழ் நாடு

அடடே..! பீகாரைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் தமிழ் மொழிப் பாடத்தில் 93/100 மதிப்பெண்!

Staff Writer

நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பீகாரிலிருந்து கட்டிடத் தொழில் செய்ய தமிழ்நாடு வந்தவரின் மகள்    ஜியாகுமாரி  என்பவர் அரசுப்பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் 467/500 மதிப்பெண்ணும் தமிழ் மொழியில்100 க்கு 93 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார்.

இது குறித்து ஜியா குமாரி கூறியதாவது, “17 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை சென்னைக்கு கட்டிடத் தொழிலாளியாக வேலைக்கு வந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் நன்றாக இருப்பதால் நான்,என் அம்மா, இரண்டு சகோதரிகள் ஆகியோர் சென்னைக்கு குடிப்பெயர்ந்தோம்”. என்கிறார்.

இதையடுத்து, இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண் எடுத்தது மட்டும் இல்லாமல் ஆங்கிலம்,சமூக அறிவியலில் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள கவுல்பஜார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றுள்ளார். பள்ளியில் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடுவதன் மூலம் தான் தமிழ் கற்றுக்கொண்டதாக ஜியா கூறினார். “தமிழ் இந்தியை விட நிச்சயமாக கடினமாக இருந்தது, ஆனால்  அதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதும், அது எளிதாகிவிடும். இங்குள்ள அனைவரும் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள்.  நானும் அவர்களுடன் தமிழில் பேசினேன். நீங்கள் எங்காவது வசிக்கிறீர்கள் என்றால், அங்கு பேசப்படும் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இது சமூகத்துடன் எளிதாகப் பழகவும் உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

 மேலும் ஜீயா பல்லாவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உயர்கல்வி தொடர உள்ளதாகவும் நீட் தேர்வு எழுதுவதற்காக கணிதம்- உயிரியல் பிரிவை  எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

இவரது அக்கா ஜெஇஇ தேர்வு எழுதுவதற்காக  தயாரிப்பில் உள்ளார். ஜியா ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன்  ஓர் அறை மட்டுமே உள்ள வீட்டில் வசிக்கிறார். அவரது தந்தை மாதம் ரூ.10,000 சம்பாதிக்கிறார், அரசு பள்ளிகளில் கிடைக்கும் இலவச கல்வி, உணவு ஆதரவு அவருக்கு உதவியுள்ளது. “மதிய உணவு திட்டம், இலவச சீருடைகள், காலணிகள், புத்தகங்கள் ஆகியவை எனது படிப்பில் சிறப்பாகச் செயல்பட உதவியது,” என்றார்.

 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பேசவும் எழுதவும் செய்து வரும் இவர் பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் தொடர்ந்து தமிழ் படிப்பேன் எனக்கூறுகிறார்.

கல்வி என்னும் ஏணியின் கரங்களை வலுவாகப் பிடித்துக்கொள்ளுங்கள் மகளே... வறுமை எனும் புதைகுழியில் இருந்து மீண்டுவிடலாம்!

- தா.கீர்த்தி