அதிமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, அதனை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜ ஈடுபடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பாத்திரிக்கையாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:
“ஏற்கெனவே என்னுடைய ஐயத்தை நான் பதிவு செய்திருந்தேன். செங்கோட்டையன் தன் இயல்பாக கட்சியின் ஒருங்கிணைப்புக்கு போராடுகிறார் என்றால், அதனை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரை பாஜக இயக்குகிறது என்றால், அது அதிமுகவுக்கு நல்லதல்ல என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். ஐயப்பட்டதைப் போல, அவருக்கு பின்னால் பாஜக இருப்பதை, தில்லியில் அமித்ஷாவை அவர் சந்தித்ததன் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். அதிமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, அதனை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜ ஈடுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி உள்பட பலருக்கும் என் மீது ஆத்திரம், எரிச்சல் வந்தது. அதிமுகவை தனியே போக விடாமல், கூட்டணியில் இணைத்தாலும், தனித்து செயல்பட விடாமல், கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்பதை அதிமுக தொண்டர்கள் உணரத் தொடங்கியிருப்பார்கள்.
பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை, அமித் ஷாவும், நிர்மலா சீதாராமனும் எந்த துணிச்சலில் சந்தித்தார்கள். அப்படியென்றால், அதிமுக மற்றும் அதன் தலைவரை பற்றி என்ன மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு அவர்கள் அதிமுகவை நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு மேலும் அதிமுக, பாஜவோடு தான் கூட்டணி என்று முடிவெடுத்தால், அதற்கு அதிமுக தொண்டர்களே பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அவருக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.