எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்த நயினார் நாகேந்திரன் 
தமிழ் நாடு

பாஜக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது: நயினார் நாகேந்திரன்

Staff Writer

பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு இன்னும் ஆறு ஏழு மாதங்கள் உள்ளன. தற்போது திமுக சார்பில் `உங்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் தான் வீதி வீதியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைப்பதாக தெரியவில்லை. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ராசிபுரத்தில் இபிஎஸ் பேசிய கூட்டத்தில் கூட 30,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களின் எழுச்சி எங்கள் கூட்டணி பக்கம் தான் இருக்கிறது. டெல்லியில் அமித் ஷா உடன் பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை. மரியாதை நிமித்தமாக பழனிசாமியை சந்தித்து பேசினேன்.

அரசியலில் ஒருவரின் கருத்தை நிரந்தரமாக ஆதரித்தும், எதிர்த்தும் பேச முடியாது. தமிழகத்தில் வட மாவட்டம், தென் மாவட்டம் எனப் பிரிக்க வேண்டிய தேவையே கிடையாது. கொங்கு நாடாக இருந்தாலும் சரி, வடக்கு பகுதியாக இருந்தாலும் சரி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நடக்கும்.

தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கும் இவர்களுக்கும் தான் போட்டி என்பதை கூற முடியாது. வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும், பொறுப்பாளர்களை அறிவிக்க வேண்டும், மக்கள் ஓட்டு போட வேண்டும். அப்போதுதான் இது குறித்து கூற முடியுமே தவிர, தற்போது ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது. வருகின்ற 11ஆம் தேதி எனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறேன். உத்தேசமாக மதுரையிலிருந்து ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது.” என்றார்.

பின்னர், `தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தினகரன், பன்னீர்செல்வம் மீண்டும் வருவார்களா’ என நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு. ‘அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்’ என பதில் அளித்தார்.