டிடிவி தினகரன் 
தமிழ் நாடு

தொகுதிப்பங்கீடு இன்னும் 4 நாள்களில் முடிவு – டிடிவி தினகரன்

Staff Writer

தில்லிக்கு நாங்கள் சென்றாலே பயத்தில் பேசுகிறார் முதலமைச்சர் மு.கஸ்டாலின். தொகுதிப்பங்கீடு முடிவுகள் இன்னும் 4 நாள்களில் சுமுகமாக எடுக்கப்படும்" என்றார் டிடிவி தினகரன்.

சென்னை விமான நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் தில்லி தலைவர்களைச் சந்திப்பதற்காக செல்லுகிறேன். முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் போது ஏன் தில்லிக்குச் செல்லுகிறீர்கள் என கேட்கிறீர்கள்.

எங்களின் கூட்டணியின் தமிழ்நாடு தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக பேசுவதற்காக தில்லி செல்கிறேன். அகில இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதன்மைத் தலைவர் அமித் ஷா தான். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பழனிசாமி, அவரை சந்தித்து பேசியிருக்கிறார். எனக்கு நான்கு நாள்களுக்கு முன்னரே, டெல்லிக்கு வர சொல்லி அழைப்பு வந்துவிட்டது.

தமிழ்நாட்டுக்கு நிதியைப் பெற்றுத்தருவதற்காக நாங்கள் டெல்லிக்கு செல்லவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் அறிவித்த பிறகு எப்படி நிதியை பெற்றுத்தர முடியும்.

அதைவிட தில்லி எவ்வளவு நிதி கொடுத்தாலும், அதை கபளீகரம் செய்வதைத் தான் திமுக அரசு செய்கிறது. முதல்வர் சும்மா சும்மா தில்லி... தில்லி... என்கிறார். தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது.

2004, 2024 ஆம் ஆண்டுகளில் பணம் கொழிக்கும் மத்திய அமைச்சரவையில் துறைகளை வாங்கி தமிழ்நாட்டுக்கு அவப் பெயரை உருவாக்கினார்கள். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள தொப்புள்கொடி உறவுகள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தது திமுக அரசு.

தில்லிக்கு நாங்கள் சென்றாலே பயத்தில் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். தொகுதிப்பங்கீடு முடிவுகள் இன்னும் 4 நாள்களில் சுமுகமாக எடுக்கப்படும்" என்றார் டிடிவி தினகரன்.