காலை உணவுத் திட்ட விரிவாக்கம் 
தமிழ் நாடு

6 - 8 வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்- 22இல் முதல்வர் விஜய் தொடங்கிவைக்கிறார்!

Staff Writer

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை வரும் 22ஆம் தேதி முதல்வர் விஜய் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 இலட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும்,

இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும்,

ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தினை முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி, சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டுமென்றும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram