பொங்கல் அன்று நடைபெற உள்ள சி.ஏ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ள நிலையில், “எதில் பார்த்தாலும், எப்போது பார்த்தாலும் "தமிழ் விரோதி" பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்...” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இன்று வெளியிட்டிருந்த எக்ஸ் வலைதளபதிவில், "பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.
சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ஐசிஏஐ (ICAI) தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்" என்று அதில் தெரிவித்திருந்தார்.
மேலும், திமுக மாணவர் அணி நிர்வாகி, “தமிழர் விரோத ஒன்றிய பாஜக அரசு!! தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை நடத்துகிறது ஒன்றிய அரசு!! தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா?” என்று எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு, ”சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு நடத்தவில்லை, ஐசிஏஐ என்ற சுதந்திரமான அமைப்பு நடத்துகிறது. பொங்கல் பண்டிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு தேசிய திருவிழா.
உங்களின் வேடிக்கையான கோட்பாட்டின்படி அனைத்து மாநிலங்களுக்கும் பாஜக எதிரானதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா. இவரின் இந்த பதிவை பகிர்ந்து, "சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே... எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் "தமிழ் விரோதி" பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்...." என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பதிவிட்டுள்ளார்.