எடப்பாடி பழனிசாமி  
தமிழ் நாடு

மோடியுடன் குமரியில் பிரச்சாரம்- எடப்பாடி பழனிசாமி தகவல்

Staff Writer

பிரதமர் மோடியுடன் கன்னியாகுமரியில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் பழனிசாமி, மனுத்தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் இதைக் கூறினார்.

(எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து, பழனிசாமி எட்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1996, 2006 தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார்.)

அவர் அளித்த பேட்டி:

"எம்.பி. சீட்டு கொடுக்காமல் ஏமாற்றி விட்டீர்கள் என்று பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

இல்லையே. நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேனே.. எல்லா ஊடகத்திலும் வந்து இருக்கிறதே. 2026-ல் கொடுப்போம் என்று சொன்னேன். அவர்களின் மனநிலை வேறு ஒன்றாக இருந்தது. கூட்டணி மாறி விட்டார்கள்.

தி.மு.க. கூட்டணியில் பல்வேறு இடங்களில் வி.சி.க.வின் பானை சின்னம் வரைய மறுக்கிறார்கள். அவர் பெயரைக் கூட எழுத மாட்டோம் என்று சொல்லும் நிலையில் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்...?

வி.சி.க. தலைவரிடம் இது பற்றி கேளுங்கள். ஏனென்றால் தி.மு.க.வைth தாங்கிப் பிடித்தவர் திருமாவளவன் தான். அவரிடம்தான் இந்த கேள்வியைக் கேட்க வேண்டும். அவருக்கு கிடைத்த பரிசு இது.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்ளை கொண்டு வருவோம் என்று இப்போது மோடியும், அமித்ஷாவும் சொல்வார்களா என முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விட்டுள்ளாரே...?

ஏன் உதயநிதி பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டு இருக்கிறாரே. சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார்கள். அவர்கள் நடத்தினால் எந்த மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள், ஆனால், கேள்வி மட்டும் என்னிடத்தில் கேட்கிறீர்கள்... அவரிடம் கேளுங்கள். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிபிஎஸ்இ பள்ளி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

எடப்பாடி தொகுதியில் 8-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள், உங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள கல்லூரி உள்ளிட்ட நிறைய திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெற்றி பெற்று வந்த பின் அந்த திட்டங்களை செயல்படுத்துவீர்களா… கல்லூரி திறக்கப்படுமா…?

அதிமுக ஆட்சியில் எந்தெந்த திட்டங்கள் கொண்டு வந்தோமோ, அந்த திட்டங்கள் முழுவதும் தொடரும். எடப்பாடி தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதிகளிலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக அரசு நிறுத்தி இருந்தால், அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களின் நன்மை கருதி தொடரும்.

தேர்தல் நடப்பது தமிழ்நாட்டில் தான். ஆனால் ஸ்டாலின் இது டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்கும் நடக்கிற தேர்தல் என்று சொல்கிறார். என்ன காரணத்தால் அவர் அப்படி ஒரு நேரேட்டிவ் செட் செய்கிறார்..?

அவருக்கு வேறு வழியில்லை, ஒன்றும் தெரியவில்லை. இது சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இல்லை. அதை முதலில் முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். புரியாமல் பேசினால் நாங்கள் என்ன செய்வது. இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேளுங்கள்…

உங்கள் தொகுதியில் நீங்கள் கடந்த முறை 93 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள், இப்போது தேர்தல் களம் எப்படி இருக்கிறது..?

மக்கள்தான் நீதிபதிகள், மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களுக்கே நன்றாகத் தெரியும். எடப்பாடி சட்டமன்றத் தொகுதி முன்மாதிரியான தொகுதியாக இருக்கும் அளவிற்கு, மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்தார்களோ, அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறேன்.

ஒன்றிரண்டு விட்டுப் போயிருந்தால், அடுத்து வரும் வாய்ப்பை வைத்து செயல்படுத்துவேன். நூறு ஏரி திட்டம். வேண்டும் என்று திட்டமிட்டு நான் எந்த இடத்தில் அடிக்கல் நாட்டினேனோ, அந்த இடத்தில் இன்னும் தண்ணீர் வரவில்லை. எவ்வளவு வேதனை. மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் உபரியாக வெளியே திறக்கப்படுகிறது. அப்போது நீரை வறண்ட ஏரிகளில் நிரப்ப முடியும். ஆனால் இந்த ஆட்சி வந்தபிறகு, திட்டமிட்டு எடப்பாடி தொகுதி போன்றே, மற்ற பகுதிகளிலும், திட்டமிட்டு நீர் நிரப்பவில்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரும். நான் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகு. இந்தத் திட்டம் எல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

நீங்கள் அமித்ஷா எல்லோரும் சேர்ந்து பிரசாரம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா..?

15-ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சியில் நிறைய ஊழல் நடந்ததாக ஆளுநரிடம் புகார் மனு அளித்தீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பீர்கள்…?

ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலை விட, அமலாக்கத் துறை ஆதாரத்தோடு, டி.ஜி.பி.யிடம் அறிக்கை அளித்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட அமைச்சர் மீது மூன்று முறை அமலாக்கத் துறையினர் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு அறிக்கை அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றமும் அமலாக்கத் துறை ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அரசு டி.ஜி.பி. வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும்கூட இன்னும் கால தாமதமாகிறது. அதிமுக அரசு இதை சட்டரீதியாக எடுத்துச்செல்லும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை, காங்கிரஸ் நிர்வாகி கொலை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுள்ளது. அதற்கான நீதி எல்லாம், கிடைக்குமா?

உறுதியாக அ.தி.மு.க. ஆட்சியில் நீதி கிடைக்கும். நாங்கள் சட்டத்தின்முன் நின்று ஆட்சி நடத்துவோம். சட்டத்தை மீறுபவர்கள் மீது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அடிப்படையில் எம்ஜிஆர், அம்மா காலத்திலும் சரி, அம்மா ஆட்சிக் காலத்திற்கு பிறகும் சரி, சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்றது.

தொடர்ந்து விஜய், எங்களுக்கும் தி.மு.க.விற்கும்தான் போட்டி என்று சொல்லிவருகிறார், மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க.வை அவர் தொடர்ந்து புறக்கணிக்கிறாரே?

நீங்கள்தான் அந்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள். அவருக்கு அவ்வளவுதான் தெரியும் என்பதால் அப்படி ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்.? அந்தக் கட்சித் தலைவரைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த கட்சி. பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்த கட்சி. மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்ற கட்சி. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பிய கூட்டணியை நாங்கள் அமைத்துள்ளோம். எங்கள் கட்சியை விஜய் விமர்சிக்கவில்லை என்றால் அது அறியாமையின் வெளிப்பாடு.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் கலைஞரின் இறுதி நாட்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று பேசி வருகிறீர்கள். அதன் உள் நோக்கம் என்ன…?

ஆ.ராசா ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவில் பரவலாகப் பேசப்படுகிறது. அதை பற்றித் தான் கிருஷ்ணகிரியில் நான் பேசினேன். கருணாநிதி உடல் நிலை சரியில்லாத போது, வீட்டுச்சிறையில் வைத்ததாக ஒருவர் சொல்கிறார். அதோடு பட்டியல் இன மக்களை பாகுபாடு பார்ப்பதாகச் சொன்னார். கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது அந்த ஆடியோவில் இருக்கிறது. இராசா மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, என் மீது பாய்வதில் என்ன நியாயம் இருக்கிறது.? இராசா பேசியதாக ஆடியோவில் வந்த செய்தியைத்தான் நான் பேசினேன்."