ஆற்று மணல் முறைகேடு 
தமிழ் நாடு

மணல் குவாரி : ரூ.1,427 கோடி இழப்பு...துரைமுருகன் உட்பட 27 பேர் மீது வழக்குப்பதிவு!

Staff Writer

ஆற்று மணல் குவாரி மோசடி மூலமாக மாநில அரசுக்கு ரூ.1,427.34 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், அரசு அதிகாரிகள் என 27 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தி.மு.க. முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 16 அரசு அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள், சில நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை, தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆற்று மணல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோத மணல் கொள்ளையால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர்கள் உட்பட 14 அதிகாரிகள், 10 தனியார் நிறுவனங்கள் உட்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த மணல் குவாரி முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட 28 இடங்களில், ஏச்சம்பாடி, கந்தனேரி, மாதவப்பெருமாள் கோவில், ஒருவந்தூர் ஆகிய நான்கு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மட்டும் ரூ.1,427.34 கோடி இழப்பீடு மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram