மின்சார வாரியம் 
தமிழ் நாடு

ரூ.397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல்... சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது!

Staff Writer

மின்சார வாரியத்தின் ரூ.397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் மோசடி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த 2021 முதல் 2023 வரை மின்மாற்றி கொள்முதலுக்கான டெண்டரில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் முறையற்ற வகையில் சலுகைகள் கொடுத்ததால், தமிழக அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகள், டெண்டர் பரிசீலனைக் குழு உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் மீது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. வழக்கு பதிந்தது.

முன்னதாக, அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன், அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியின் துணைச் செயலாளர் எஸ். சரவணன், மதுரையைச் சேர்ந்த இராஜ்குமார் ஆகியோர் தனித்தனியாக இதுகுறித்து புகார் அளித்திருந்தனர்.

டெண்டர் விதிகள் மாற்றியமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக சலுகைைள் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்களில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கொள்முதல் விதிகள் மீறப்பட்டதா, அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தினார்களா, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு முறையற்ற சலுகைகளை வழங்குவதற்காக ஏதேனும் கூட்டுச் சதி நடந்ததா ஆகியவை குறித்து இந்த விசாரணையில் தெரியவரும்.

மின்மாற்றி கொள்முதலுக்காக அங்கீகரிக்கப்பட்ட விலை சந்தை விலையுடன் பொருந்தியதா, ஒப்பந்த நிபந்தனைகள் கையாளப்பட்டனவா, இந்தச் செயல்முறையின் மூலம் அரசு அதிகாரிகள் அல்லது தனியார் நபர்கள் பணப் பலன்களைப் பெற்றார்களா ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது.