தமிழகம் முழுவதும் உள்ள 52 கோயில்களில் இன்று முதல் செல்போன் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று இந்துசமயத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூகஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:
" ஏற்கெனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் இன்று முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பழனி, திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன் தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது உட்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய கைப்பேசிகளை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கைப்பேசிகளை திருக்கோயில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள், பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று அமைச்சர் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.