கோழிகள் இறப்பு 
தமிழ் நாடு

கடலூரில் பறவைக் காய்ச்சல் - மத்தியக் குழு ஆய்வு!

Staff Writer

கடலூரில் உள்ள கோழிகளுக்குப் பறவைக்காய்ச்சல் உறுதியானதை அடுத்து, மத்திய மருத்துவக் குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.

அண்மையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் இருந்த கோழிகள் ஆயிரக்கணக்கில் திடீரென கொத்துக் கொத்தாக செத்து விழுந்தன. குறிப்பாக, கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம், திருச்சோபுரம், நெல்லிக்குப்பம், தம்மம்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன.

இதன் காரணமாக கடலூரின் கட்டியங்குப்பத்தில் உள்ள பண்ணைகளில் இறந்த கோழிகளின் மாதிரிகள் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில், கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால், பறவைக்காய்ச்சலால் இறந்த கோழிகளின் பண்ணையில் மீதமிருக்கும் கோழிகளையும், கட்டியங்குப்பம், அதனைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பண்ணைகளில் உள்ள கோழிகளையும் அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், முறையாக கோழிகள் அழிக்கப்படுகிறதா, கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறதா, வேறு எங்கும் பறவைக் காய்ச்சல் பரவல் உள்ளதா என்பதை மத்திய் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், மனிதர்களுக்கு ஏதேனும் பறவைக் காய்ச்சல் பரவல் உள்ளதா என்பதையும் மத்திய மருத்துவக் குழுவினர் கடலூரின் கட்டியங்குப்பத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram