சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ் நாடு

அம்பாசமுத்திரம், பெருந்துறையில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த அனுமதி!

Staff Writer

அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய், திருச்சி கிழக்கு பதவியிலிருந்து விலகினார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில், விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோரின் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

கடந்த ஜூலை 10ஆம் தேதி, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தத் தடைவிதித்தது. இந்தத் தடையை நீக்கக்கோரி முதல்வர் விஜய், பதவிவிலகிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.     

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram