தமிழ் நாடு

சென்னை ஆணவக் கொலை… சர்மிளா கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்!

Staff Writer

காதலித்து திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் கணவர் கொல்லப்பட்டதால் வேதனையில் இருந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பள்ளிக்கரணை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் (25). இவர் மெக்கானிக். இவரது மனைவி சர்மிளா (22). வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்கள், காதலித்துவந்த நிலையில், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதன்பின்னர், பிரவீனின் வீட்டில் குடும்பம் நடத்திவந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி சர்மிளாவின் அண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை கொலை செய்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணைபோலீசார் வழக்குபதிவு செய்து, கொலைக்கு காரணமான சர்மிளாவின் அண்ணன் உட்பட அவரது நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், பிரவீன் இறந்தபிறகு, அவரது வீட்டிலேயே மாமனார், மாமியாருடன் வசித்துவந்த சர்மிளா மனஉளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. கடந்த 14ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு சர்மிளா பரிதாபமாக இறந்தார்.

பிரவீனின் மனைவி சர்மிளா தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. தன் மரணத்திற்கு தன்னுடைய பெற்றோர், அண்ணன்களே காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சர்மிளா. பெற்றோர் துரை, சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோரது பெயர்களை கடிதத்தில் சர்மிளா குறிப்பிட்டுள்ளார். தன் கணவன் இல்லாத இந்த உலகத்தில் இனி இருக்கப்போதில்லை என உருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மனஉளைச்சலில் தற்கொலை செய்தாரா வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.