உலகம் முழுக்க நடைபெறும் தேர்தல்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசித் தகவல்களை அளிக்கும் பிரபலங்களே தேர்தலில் நின்றால், எப்படி இருக்கும்? அப்படியான ஒரு நிலைமைதான் சென்னையில் ஏற்பட்டிருக்கிறது.
சென்னையில் அச்சு ஊடகம் எனப்படும் செய்திப் பத்திரிகைகள் மட்டுமே இருந்த காலத்தில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் Chennai Press Club எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. அனைத்துவிதமான கருத்துகளையும் கொண்ட பத்திரிகையாளர்கள் கூடி, கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஓர் இடமாக இருந்துவருகிறது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த அமைப்புக்குத் தேர்தல் நடைபெறாமல் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அதன் ஒரு கட்டமாக, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை நியமித்து நிலவர அறிக்கையை உயர்நீதிமன்றம் கேட்டது. ஆனால் அதைத் தொடர்ந்தும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
தேர்ந்தெடுக்கப்படாத ஒரு தரப்பினர் நிருவாகம் செய்வதா என பல போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், பத்திரிகை உரிமையாளர்கள் என்.இராம், நக்கீரன் கோபால், பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், டி.சுரேஷ்குமார், கவிதா முரளிதரன் முதலியோர் அடங்கிய வழிகாட்டுதல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு போலியான உறுப்பினர்களை நீக்கி, 1,502 பேர் கொண்ட உறுப்பினர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதையடுத்து, தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் கடந்த மாதம் 18ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் அறிவிக்கையையும் வெளியிட்டார். அதன்படி கடந்த சனிக்கிழமை வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.
நாளை மனுத்தாக்கலுக்குக் கடைசி நாள் என்பதால், அணி அணியாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்கிறார்கள்.
முதல் அணியாக முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளரும் அரண்செய் வலைக்காட்சி பிரபலமுமான அசீப் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இன்னொரு அணியின் சார்பில் மூத்த பத்திரிகையாளரும் தொலைக்காட்சி விவாத பிரபலமுமான ஆர்.கே. இராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். முன்னாள் தொலைக்காட்சி- இந்நாள் வலைக்காட்சி பிரபலம் சபீர் அகமதுவும் இந்த அணியில் போட்டியிடுகிறார்.
வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றோ மறுநாளோ முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் நடைபெறும் பத்திரிகையாளர் மன்றத் தேர்தல், சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
செய்தியாளர்களே செய்தியாகும் அரிய தருணங்களில் இதுவும் ஒன்று!