உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது 2 தீர்ப்புகளை விமர்சித்துள்ளார் விசிக பொதுச்செயலாளரான ரவிக்குமார் எம்.பி.
இது பற்றி ரவிக்குமார் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறப் போகிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி, அம்பேத்கரியரின் மகன், பௌத்தர் – எனப் பல்வேறு சிறப்புகள் அவருக்குண்டு.
அவர் நீதிபதியாக இருந்து எஸ்சி சமூகத்துக்கு இரண்டு பெரிய தீமைகளைச் செய்திருக்கிறார்.
ஒன்று: எஸ்சி பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனை அனுமதித்தது. இந்தத் தீர்ப்பு எஸ்சி சமுகத்தினரின் எண்ணிக்கை பலத்தை உடைத்து அவர்களுக்குள் பகையை ஏற்படுத்தியது.
இரண்டு: கிரீமி லேயர் அளவுகோல் எஸ்.சி பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறியது.
எஸ்சி சமூகத்தினர் உயர் பதவிகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவும், எஸ்சி இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யவும் சனாதனிகள் நீண்டகாலமாக செய்துவரும் பிரச்சாரம் இது. அதை பி.ஆர்.கவாய் வழிமொழிவது வேதனை அளிக்கிறது.
பி.ஆர்.கவாயைப் போன்ற அரசியல் பின்னணி எதுவும் இல்லாத கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களும் உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர் இத்தகைய தீங்கை தலித் சமூகத்துக்குச் செய்யவில்லை.
பட்டியல் சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய ஒருவராகவே வரலாற்றில் பி.ஆர்.கவாய் நினைவுகூரப்படுவார். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.