முதல்வர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்! – முதல்வர் விமர்சனம்!

Staff Writer

“தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்” என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அங்கு மீட்பு பணிகள் நடந்தன.

இந்நிலையில், அந்த பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்!

இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆய்வில் ஈடுபட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், ”விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களின் நிலையை தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். விழுப்புரத்தில் 3 அமைச்சர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விழுப்புரத்தில் 26 முகாம்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

சென்னையில் 32 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மா உணவங்களின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது.

மழைநீர் தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. சென்னையில் 21 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக நடைபெறுகிறது. 9.10 லட்சம் உணவுப் பொட்டலங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அம்மா உணவகம் மூலம் நேற்று 1.07 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மழைநீர் வடிந்த உடன் பயிர்சேதம் கணக்கெடுக்கப்படும். தேவைப்படும் போது நானும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்வேன். மத்திய குழு தமிழகத்தை பார்வையிட வேண்டும். விழுப்புரம், கடலூர் மாவட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.