முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுக்கு வாய்த்துள்ளது! – முதல்வர் புகழாரம்

Staff Writer

“பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. நூறு வயதை கடந்தும் தமிழ் சமூகத்துக்கு தொண்டாற்ற தயார இருக்கிறார்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். நல்லக்கண்ணு குறித்த 'நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதலமைச்சர் வெளியிட்டார்

முன்னதாக நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நல்லகண்ணுவுக்கு கம்பீரம் மற்றும் செவ்வணக்கத்தை தெரிவிக்கிறேன். 100 வயதை கடந்த நல்லக்கண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். நான் இங்கு வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெற வந்துள்ளேன்.

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. நூறு வயதை கடந்தும் தமிழ் சமூகத்துக்கு தொண்டாற்ற தயார இருக்கிறார்

பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்த விழா இது.

கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினேன். அகத்தில் இருக்கும் கண் நல்லக்கண்ணு என கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார் தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை. நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதுதான் எனக்கு கிடைத்த பெருமை.

தகைசால் தமிழர் விருது தொகையுடன் மேலும் ரூ.5 ஆயிரத்தை சேர்த்து அரசுக்கே நிதியாக வழங்கியவர் நல்லக்கண்ணு. கட்சிக்காகவே உழைத்தார். உயர்நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லக்கண்ணு. கம்யூனிஸ்ட் உடனான நட்பு தேர்தல் அரசியலைத் தாண்டிய கொள்கை நட்பு. தி.மு.க. உருவாகவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்திருப்பேன் என்று கருணாநிதி கூறினார்.

இயக்கம் வேறு தான் வேறு என்று பார்க்காமல் உழைத்தவர். உழைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார்" என்று அவர் நல்லகண்ணுவுக்கு புகழாரம் சூட்டினார்.