ஜி.யு. போப் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

Staff Writer

ஆக்ஸ்போர்டில் உள்ள ஜி.யு. போப் கல்லறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் முதலமைச்சர் உள்ளார். அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்த அவர், இன்று காலை ஆக்ஸ்போர்டு பல்கலை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 1839 ஆம் ஆண்டு தமிழகம் வந்து தமிழ் மொழி கற்று தமிழுக்கு சேவையாற்றிய ஜி.யு. போப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"ஜி.யு.போப்!

19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்!தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்! தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்!ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா?அங்குள்ள ஜியு போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்…” இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.