கோல்ட்ரிப் மருந்து 
தமிழ் நாடு

குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்துக்கு பல ஆண்டாக ஆய்வுக்குப் போகாத அதிகாரிகள்!

Staff Writer

மத்திய பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக எந்தவித ஆய்வையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுவரை 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு, அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கை கூட மாநில அரசு எடுக்கவில்லை. ம.பி.யில் இருந்து தமிழகம் வந்த அம்மாநில போலீசார் தான் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே, ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் சிடிஎஸ்சிஓ நிா்வாகிகள் சாா்பில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் கடந்த 2011-ஆம் ஆண்டு உரிமம் வழங்கியுள்ளது. ஆனால், அதன் பிறகு அதிகாரிகளின் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக அந்த நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமலும் அந்த நிறுவனம் இயங்கி வந்தது ஆய்வில் தெரியவந்தது.

மேலும், மருந்து தரக் கட்டுப்பாட்டு விதிகள் டி மற்றும் சி பிரிவுகளின் விதி 84ஏபி-இன் படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் அவா்களின் அனுமதிக்கப்பட்ட மருந்து உற்பத்தி குறித்த தகவல்களை ‘சுகம்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும். நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் இந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்டன.

இவ்வாறு தரவுகளைப் பதிவிடுவது தொடா்பாக நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தியாளா்களுக்கும், தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகத்துக்கும் கடந்த 2023-ஆம் ஆக்டோபரில் தகவல் அனுப்பப்பட்டது. மேலும், மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகங்களுடன் நடத்தப்படும் மாதாந்திர ஆய்வு கூட்டத்தின்போதும், இந்தத் தரவுகள் பதிவேற்றம் குறித்த நினைவூட்டல் வழங்கப்பட்டது.

ஆனால், ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் அதன் உற்பத்தி குறித்த எந்தவிதத் தரவுகளையும் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. அதன்படி, இந்த நிறுவனத்தை மருந்து உற்பத்தி நிறுவனமாகவே கருத முடியாது. இந்த விதியை மாநிலத்தில் முறையாக நடைமுறைப்படுத்துவது மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகத்தின் பொறுப்பாகும்.

அதோடு, ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் குறித்த எந்தவிதத் தகவலும் சிடிஎஸ்சிஓ-வுக்கு வழங்கப்படவில்லை. அதன் காரணமாக, சிடிஎஸ்சிஓ சாா்பில் அந்த நிறுவனத்தில் இதுவரை எந்தவிதத் தணிக்கையும் செய்யப்படவில்லை. தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் தரப்பிலும் இந்த நிறுவனம் குறித்த தகவல் எதுவும் வழங்கப்படவில்லை.

எனவே, தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிா்வாகம் சாா்பில் அடிப்படை வழிகாட்டு நடைமுறைகள் முறையாக அமல்படுத்தாததே இந்த விவகாரத்துக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜித்து பட்வாரி சனிக்கிழமை கூறுகையில், ‘முறைகேடாக ரசாயனம் கலந்த இருமல் மருந்து உட்கொண்டதால் 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மாநில அரசின் அலட்சியப் போக்குக்கு பொறுப்பேற்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். துறையின் செயலா் நீககம் செய்யப்பட வேண்டும்’ என்றாா்.