சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை குறித்து இந்திய தொழிற்சங்க மையம்-சிஐடியு தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
”ஒன்றிய பாஜக அரசின் நிதிக் கொள்கை, மாநில உமைகளுக்கு எதிரான கொள்கை, தேசியக்கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, சமூகநீதிக்கு எதிரான கொள்கை போன்றவற்றை நிராகரித்து மதச் சார்பின்மையை உயர்த்தி பிடித்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் தவறான கொள்கைகளையும், நடைமுறைகளையும் எதிர்த்து எடுக்கும் நடவடிக்கைகளில் சிஐடியு தமிழக அரசின் பக்கம் நிற்கும்.
இந்த உரையில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் திட்டங்கள், சலுகைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பில் பெரும்பங்கு வகிக்கும் இந்தத் துறையில் அரசின் கவனம் வரவேற்கத்தக்கது. தொழிலுக்கு ஊக்கம் தருகிற அதே வேலையில் தொழிலின் உண்மையான இயங்கு சத்தியான தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. இதுவரை குறைந்தபட்ச கூலிச் சட்டம், வேலை நேரச் சட்டம் போன்றவையும், சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையுங்கூட மீறப்பட்டே வருகிறது.
பெருந் தொழில்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊக்கம் தரப்படுவதும், சிரமமின்றி தொழில் புரிய தோதான (Ease of doing business) நடவடிக்கைகளும் அறிவிக்கப்படுகின்றன, ஆனால் தொழிலாளர் அனுபவிக்கிற கொடுமையான சிரமங்களைத் தணிக்க அக்கறை காட்டப்படவில்லை. தொழில் கொள்கை என்று அறிவிப்பதைப் போல தொழிலாளர் கொள்கையும் வகுக்கப்பட வேண்டும். தொழிற் தகராறுகளில் போலீசின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு உடனே செயல்படுத்தப்பட வேண்டும். அதேபோல மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு ஊழியர்கள் பங்காற்றுவதை ஆளுநர் அறிக்கை அங்கீகரித்திருப்பது சரியானது. இதில் அங்கன்வாடி, சத்துணவு, மக்களைத் தேடி மருத்துவம், ஆஷா போன்ற திட்டப்பணியாளர்களின் பங்கும் சிறப்பானது. இந்தப் பிரிவினர் அரசு ஊழியர் ஆக்கப்படவேண்டும். கடந்த ஆட்சி பொதுத்துறைகளைக் படிப்படியாக தனியார் மயப்படுத்தும் முறையில் ஒப்பந்தத் தொழிலாளர் நியமனம், வெளி முகமையில் பணிகள் செய்தல் போன்றவற்றைப் புகுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வழங்கல், ஆவின், சிவில் சப்ளைஸ் போன்ற எல்லாவற்றிலும் இந்த வழி முறைகள் மூலம் தொழிலாளர்களுக்கு எதிரான பெரும் உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது.
குறைந்தபட்ச கூலி கடந்த 8 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. கோடிக்கணக்கான உழைப்பாளர் வயிற்றில் அடிக்கும் இந்த முறைக்கு முடிவுகட்ட வேண்டும்.
பத்து தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதை என்று பட்டியலிடப்பட்டுள்ள தூண்களில் தொழிலாளர்கள் முறைசாராத் தொழிலாளர்கள், சுயதொழில் புரிவோர், பெண் தொழிலாளர்கள் என்ற சொற்களே இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
1.5 டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற லட்சியம் என்பது மகிழ்ச்சிக் குரியது. தமிழகத் தொழிலாளர்கள் 42 சத பெண் உழைப்பாளர் உட்பட உரிய ஊதியம் உயர்த்திப் பெறாவிட்டால் இந்த இலக்கை அடைய முடியாது. குறைந்தபட்ச கூலி ரூ.26,000 என்பதை செயல்படுத்த வேண்டும்.
ஜூன் 8 அன்று மாண்புமிகு முதல்வரைச் சந்தித்து சிஐடியு கோரிக்கை மனுவினை அளித்துள்ளது. அவற்றை முழுமையாக மனங்கொண்டு தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.” என சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு கூறியுள்ளது.