சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று அவை தொடங்கியதும், சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பு விவரம்:
1) கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு விடுத்த கோரிக்கையினை பரிசீலனை செய்து பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 44ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2) தமிழ்நாடு மின்தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ரூ. 33,066 கோடியில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 196 புதிய துணை மின்நிலையங்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படும்.
3) தூத்துக்குடியில் 800 மெகாவாட் திறன்கொண்ட 2 அலகுகளுடன், மொத்தமாக 1600 மெகாவாட் திறன்கொண்ட புதிய சூப்பர்கிரிட்டிக்கல் வெப்ப மின் நிலையம் ரூ. 20,800 கோடி செலவில் நிறுவப்படும்.
4) தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
5) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் ஏற்படுத்தப்படும்.
6) மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.1,762 கோடியில் மேற்கொள்ளப்படும்.
7) காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில், குறைக்கடத்தி - மின்னணு உற்பத்தி பூங்கா ரூ. 175 கோடியில் அமைக்கப்படும்.
முன்னதாக, கடந்த 19ஆம் தேதி பால் கொள்முதல் விலை ரூ.38இலிருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.