தமிழகத்தில் முதன்முறையாக தந்தையர் மகப்பேறு கால விடுமுறையை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
திருமணமான ஆண் அரசுப் பணியாளர்கள் 15 நாள்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பினை குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்னிருந்தோ குழந்தைப் பிறந்த நாளிலிருந்து 6 மாதத்திற்குள்ளாகவோ எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றது.
இந்த முக்கியமான காலகட்டத்தில், தாய், குழந்தைக்கு உடல், மனரீதியான ஆதரவு வழங்குவதுடன் குழந்தைப் பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.
பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை, குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்." என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.