முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்!

Staff Writer

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு, அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.  

”நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருக்கிறது. 

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று விஜய் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.