சட்டப்பேரவையில் இன்று காலையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் காவிரிப் பிரச்னை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்மீது விவாதம் நடைபெற்றது.
முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நான்கு அம்சங்களைப் பேசினார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தவேண்டும், முதலமைச்சரின் கர்நாடகப் பயணம், குறுவை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், காவிரி டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிப்பது ஆகியவற்றை வலியுறுத்தினார்.
அப்போது, இடையிடையே பேரவைத் தலைவர் பிரபாகர் குறுக்கிட்டுப் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் விஜய் எழுந்து பேசினார். அப்போது, உதயநிதியின் பேச்சுக்கு நேரடியாக பதில்கூறாமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரைக் குறிப்பிடாமல், அவர் நீர்வளத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்த 1969ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் புதிய அணையைக் கட்டினார்கள் என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, அதைப் பற்றிப் பேசி அரசியல் செய்யவில்லை என்கிறபடி கூறினார்.
மேலும், குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறியதுடன், தினமும் பேப்பரைப் படித்தால் தெரிந்துவிடும் என்று சாடையாகப் பேசினார்.
அதற்கு உதயநிதி, தினமும் பேப்பரைப் படித்தால் மட்டும் போதாது; நான் சொன்னது குறுவைத் தொகுப்பைப் பற்றி அல்ல; வறட்சி நிவாரணம் பற்றிதான்... இதற்கு விவசாயிகளைக் கூட்டி அவர்களின் பிரச்னையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறபடி சூடாக பதில் அளித்தார்.