முதல்வர் விஜய் - ஜெம் கிரானைட் வீரமணி  
தமிழ் நாடு

கிரானைட் வீரமணி வழக்கில் ஆணையம் தேவையில்லை- வைகோ

Staff Writer

ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் தொடர்புடைய அனைவரையும் குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"இளம் பிஞ்சுகளை நாசப்படுத்திய ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு காவல் துறை விசாரணையும் வேகம் எடுத்திருக்கிறது.

"குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்"

எனும் குறளுக்கு ஒப்ப தொழிலதிபர் வீரமணியால், தமிழ்நாட்டிற்கு இழிவையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கும் இந்த வழக்கு, முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் முறையாக சென்று கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

பல ஆண்டு காலமாக குழந்தைகளை இக்கொடூரத்திற்கு இரையாக்கிய தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி மட்டுமில்லாமல், இதற்குத் துணை போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் கண்டறிந்து கைது செய்து குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில், தொழிலதிபர் வீரமணியின் வழக்கை ஆழக் குழி தோண்டிப் புதைப்பதற்கு திட்டம் தீட்டிய காவல்துறை அதிகாரிகள், அரச பீடத்திலிருந்து உதவிய பெரிய மனிதர்கள், இடைத்தரகர்கள் எவரும் இந்த வழக்கில் தப்பித்துவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் எவ்வித அழுத்தங்களுக்கும் விஜய் அரசு இடம் தராது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் வழிகாட்டுதலில் இந்த வழக்கின் விசாரணை சரியான திசையில் நடத்தப்பட்டு வரும்போது, விசாரணை ஆணையம், சி.பி.ஐ. விசாரணை என்பது தேவையற்றது.

அத்தகைய கோரிக்கைகளை நிராகரித்து, ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram