முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், இன்று சமூக நலன்- மகளிர் உரிமைத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, வெற்றித் தமிழகம் தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், அதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந்தைகள், மூத்தகுடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்தகுடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும்,
குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேற்படி பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல்
8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.