தமிழ் நாடு

அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் தந்த 436 திட்டங்கள்!

Staff Writer

இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறியது:

“ இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், வருங்காலங்களில், அனைத்து துறைகளுக்கும் வெற்றித் தமிழகத்தின் தொலைநோக்கு திட்டங்களாக மொத்தமாக 436 திட்டங்களை ஒவ்வொரு துறைக்கும் வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன இலக்கு அதாவது எதை நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என்று ஒரு இலக்கை நிர்ணயித்திருக்கிறார். ஒவ்வொரு துறையும் தொலைநோக்கு திட்டத்தின் மூலமாக பயணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை அந்தந்த துறையினுடைய அமைச்சர்கள் அவரவர்களுடைய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, இதற்கான விளக்கமான திட்டத்தினை அவர்கள் வகுத்துக் கொண்டு அதை எவ்வளவு நாளில் செயல்படுத்த முடியும்? விரைவாக செயல்படுத்தி முடிக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அவர் வழங்கியுள்ள ஒவ்வொரு தொலைநோக்கு திட்டங்களையும் அவர்கள் செயல்படுத்துவதற்கான அனைத்துத் திட்டங்களுக்கும் முதலமைச்சரின் ஒப்புதலின் பெயரில் விரைவில் அதை நோக்கி பயணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், இளைஞர்கள் மேம்பாட்டு முன்னேற்றம், பெண்கள் மகளிர் மேம்பாடு, விவசாயிகளின் வளர்ச்சி, மீனவர்களின் வளர்ச்சி மற்றும் இலஞ்ச லாவணியமற்ற நல்ல ஒரு ஆட்சி, போதை இல்லாத தமிழகம் மற்றும் அனைத்துத் துறைகளுக்கும் இதே மாதிரியான ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் முதலமைச்சர் வகுத்துக் கொடுத்திருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தம் 436 திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைத்து அமைச்சர்களும் இதை விளக்கமாக மதிப்பீடு செய்து எப்படி செயல்படுத்த வேண்டும் என்று அதை விரைவாக முழு அளவிலான திட்ட வடிவங்களுடன் கொண்டு வந்து அதற்குப் பிறகு மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஒப்புதலின்படி செயல்படுத்தக்கூடிய பணிகளை அவர்கள் தொடங்குவார்கள்.

கேள்வி – டாஸ்மாக் மாற்றங்கள் குறித்து…

பதில் –  717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. நம்முடைய  இலக்கு போதையில்லா தமிழகம். தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் போதை மருந்துகள் எவ்வளவு புழக்கத்தில் இருந்தது என்று நன்றாக தெரியும். அனைத்தையும் ஒழிக்கும் அளவிற்கு முதல்வர் அவர்கள் அனைத்து காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக குட்கா செயல்படுத்தக்கூடிய கடைகள் எல்லாம் சீல் வைக்கப்பட்டு வருகிறது. போதை மருந்துகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அனைத்துத் துறைக்கும் முடுக்கி விட்டுள்ளார். நம்முடைய பயணம் – போதையில்லாத தமிழகம் – 717 டாஸ்மாக் கடைகளை மூடப்படுவதற்கு இன்று வெளியிடுவதாக துறையின் அமைச்சர் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் தெரிவித்திருக்கிறார்.  

எல்லா கடைகளிலும் தினமும் ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தவிதத்திலும் இந்த அரசு போதை மருந்துகளை முற்றிலும் ஒழிக்கும் பணிகளை முதல்வர் அவர்கள் முதல் நாளிலிருந்து முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக குட்காவைப் பொறுத்தவரைக்கும் மதுரையில் ஒரு வாரத்தில் 24 கடைகளுக்கும் மேல்  சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

கண்டிப்பாக அனைத்துத் துறைகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விரைவாக அதை செயல்படுத்தும் விதமாக அனைத்துத் துறை அமைச்சர்களும், அவர்களுடைய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து செயல்படுவார்கள்.

கேள்வி – மேகதாது அணை பற்றி….

 

பதில் – மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எந்த முயற்சிகள் எடுத்தாலும் அதை சட்டபூர்வமாக தடுக்கும் அனைத்து விதத்திலும் முதல்வர் அவர்கள் முடுக்கிவிட்டுள்ளார். அதை நோக்கி, சட்டபூர்வமாக ஆலோசித்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.