இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், 12.08.2026 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருவதாகவும், நாளதுவரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் எனவும் விஜய் கூறியுள்ளார்.