பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிபர்களைச் சந்தித்தும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டும் வருகிறார்.
“ முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் 14.9.2026 அன்று இங்கிலாந்து, இலண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து விளக்கிக் கூறினர்.
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சேர்ந்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த திரு.வெங்கடேசன் ஆகியோர் இலண்டனில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உட்பட, தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து திரு.ஹிந்துஜா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாகத் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டன.
முதலமைச்சர் அவர்கள், மேற்கண்ட முதலீடுகள் தமிழக இளைஞர்களின் இலட்சியங்களை பிரதிபலிப்பதாகவும், மேம்பட்ட உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) மூலம் உருவாகும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், தமிழ்நாட்டுடன் முதலீடு, வர்த்தகம், மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வணிக நிறுவனங்களை ஊக்குவித்தார்.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய முன்னணி நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்ததோடு, முதலீடுகளை எளிதாக்குவதிலும், மாநிலத்தில் அவர்களின் வணிகங்களை வெற்றிகரமாக நிறுவி இயக்குவதற்குத் தேவையான தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.
முதலமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தக் கலந்துரையாடல்களின் சாத்தியமான விளைவுகளில், பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள்; ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு; அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழுவின் வருகை; நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள்; இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம்; பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் ஆகியவை அடங்கும்.
இந்நிகழ்வுகளில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, I.F.S., திருமதி நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India, London,நிறுவனப் பிரதிநிதிகள்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.