பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப்பெண் அதிரடி படை என்னும் புதிய பிரிவை இன்று தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்.
சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இந்த விழா நடைபெற்றது.
முதலாவதாக, சிங்கப்பெண் போலீசாரின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர், சிங்கப்பெண் அதிரடிப் படையின் இலச்சினை வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிங்கப்பெண் அதிரடி படையின் சுற்றுக்காவல் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. முதலில் வந்த வாகனத்தை முதல்வர் விஜய் தானே ஓட்டி, அந்த மைதானத்தில் ஒரு சுற்று வந்து முறைப்படி அவற்றின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்த திட்டத்தின் தொடக்க விழா மிகவும் மனதிற்கு நெருக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
"சமூகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் இன்றோ, நேற்றோ தொடங்கியது அல்ல; பல வருடங்களாக நடந்துவருகிறது. முக்கிய காரணமாக இருப்பவை போதைப்பொருள் ஆகும். அவற்றை வேரோடு அழிப்பதுதான் முக்கிய நோக்கம்.
பெண்கள் கண்ணியத்துடன் வாழவும், அவர்களின் கனவு நிறைவேறவும் இந்த ஆட்சி துணைநிற்கும். முதல் முறையாக டிரோன்களைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்." என்று விஜய் பேசினார்.
இவ்விழாவில் முதல்வரின் தாயார் ஷோபா, நூற்றுக்கணக்கான சிங்கப்பெண் அதிரடிப் படை போலீசார் பங்கேற்றனர்.