முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

முதல்வர் விஜய்க்கு பூவுலகின் நண்பர்கள் நன்றி... ஏன்?

Staff Writer

எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு - பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. 

”பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும். எல் நினோ நிகழ்வானது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும். கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது அது தீவிர (Strong / Super) எல் நினோ எனக் கருதப்படுகிறது.

வானிலை ஆய்வுகளின்படி, 2026ஆம் ஆண்டு தீவிர எல் நினோ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்யக்கூடும். மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதீத மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையின் கீழ் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு "தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA)" யின் கீழ் பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க ஆணையிடப்பட்டது. அக்குழுவில் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கடலோர வள மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்ற பின்வரும் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

• பேராசிரியர் எஸ்.கண்மணி, தலைவர், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (CCCDM), அண்ணா பல்கலைக்கழகம் அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்படும் CCCDM-இன் மாற்று இயக்குநர்.

• திரு.பாலாஜி நரசிம்மன், பேராசிரியர், நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியல் ஆய்வகம், குடிசார் பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), சென்னை.

• திரு.அறிவுடை நம்பி அப்பாதுரை, இயக்குநர், காலநிலை மீள்திறன் பிரிவு, WRI இந்தியா; உறுப்பினர், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுமைக் குழு.

• பேராசிரியர் டாக்டர் ரமேஷ் ராமச்சந்திரன், ஆலோசகர், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC): நிபுணர் உறுப்பினர் - நிலையான மற்றும் காலநிலை மீள்திறன் கொண்ட நீலப் பொருளாதாரத்தை (Blue Economy) மேம்படுத்துதல்.

• டாக்டர் ஆர்.வெங்கடேசன், நிபுணர் உறுப்பினர் - மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு; நிபுணர் உறுப்பினர் தொழில்நுட்ப நிபுணர் குழு (CRZ) மற்றும் TNMRF.

• டாக்டர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட், இயக்குநர்- சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI)-பவளப்பாறைகள், கடற்புல் சூழலமைப்பு, கடல்சார் உயிரினப் பன்மை மற்றும் கடலோர சூழலமைப்பு மீட்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களின் தலைமைப் பொறுப்பாளர்.

• திரு.ஆர். பிரதீப் ஜான், மூத்த மேலாளர், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL).” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.