முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலர் மரியாதை செலுத்தினார்.
பின்னர், அக்கட்சியின் இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் 76 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றிவைத்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மார்பளவு சிலைகளையும் அவர் திறந்துவைத்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.