தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தை தொடர்ந்து சிறைப் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தேனி பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் சிறைத் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
" தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தப்பிச்சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து, தேனி சிறையில் 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் ந.நகேஸ்வரன் சிறைக் கைதிகள் -பணியாளர்கள் மீதான கண்காணிப்பு, கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு, மேல்முறையீடு) விதிகளின்படி, 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைகளில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத்துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.