உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் விஜய் கூறியுள்ளதாவது:
"இந்தக் கோரிக்கை கடந்த 1980ஆம் ஆண்டிலேயே மாநில அரசால் முன்வைக்கப்பட்டது. தென்னிந்தியாவில் உள்ள வழக்காடிகள் தங்கள் நீதிசார் தீர்வுகளுக்காக, புதுதில்லி வரை செல்ல வேண்டியுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரமாக விளங்கும் சென்னையில், இக்கிளையை அமைப்பது அனைத்து தென்மாநிலங்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர் குழுமமானது, மிக்க சட்ட அறிவும், வாதத்திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்சநீதிமன்றத்தின் தேவைகளை நிறைவு செய்யும்.
தற்போது, இந்திய உச்சநீதிமன்றம் அமைந்துள்ள புதுதில்லிக்கும், தென்மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாக, நாட்டின் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக தென்மாநில மக்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
எனவே, இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று முதலமைச்சர் விஜய் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.