சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் விருதுகளை வழங்கினார்.
கடந்த இரு நாள்களாக தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. முதல் நாளில் பிற்பகல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
இரண்டாம் நாளான நேற்று முற்பகலில் காவல்துறை அதிகாரிகள் மாநாடும், பிற்பகலில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடும் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் காப்பு
மாநாட்டின் நிறைவாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றியமைக்காக
2024-25ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.என். பூங்கொடி, முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், முன்னாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஐ.எஸ். மெர்சி ரம்யா ஆகியோருக்கு முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ் ஆட்சிமொழி
தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை திறம்படச் செயல்படுத்தியமைக்காக 2023-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் ஆகியோர் பெற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலன்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான விருதினை முன்னாள் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. சாந்தி, முன்னாள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
குறைதீர்ப்பு விருது:
முதலமைச்சரின் குறைதீர்ப்புப் பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக
2025-26ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரா. அழகுமீனா, இ.ஆ.ப. அவர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
இதே காரணத்துக்காக, சிறந்த காவல் ஆணையருக்கான 2025-26 ஆம் ஆண்டிற்கான விருதினை முன்னாள் ஆவடி காவல் ஆணையர் திரு. கே. சங்கர் பெற்றார்.
20 சுகாதாரக் குறியீடுகள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக 2025-26ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். சரவணன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி ஆகியோருக்கும்;
மதுவிலக்கு குற்றத் தடுப்பு
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருதுகளை முன்னாள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வா.வெ. சாய் பிரணீத், முன்னாள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம், முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின் ஆகியோருக்கும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.