இந்தியன் ஆயில் 
தமிழ் நாடு

வணிக சிலிண்டர் நிறுத்தம்… நெருக்கடியில் உணவகங்கள்!

Staff Writer

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள உணவகங்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிகப் பயன்பாட்டு (19 கிலோ) சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு “வீட்டு உபயோக முன்னுரிமை” கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

சென்னையின் மணலியில் உள்ள ஐஓசி சிலிண்டர் நிரப்பும் ஆலையில் இருந்து வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், நகரில் உள்ள ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டி சாலைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள பல உணவகங்கள் மெனுவைக் குறைக்கவும், உணவுகளின் விலையை உயர்த்தவும் திட்டமிட்டு வருகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்காலிகமானது என்றும், மாற்று நாடுகளிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சென்னை மட்டும் அல்லாமல் பெங்களூரு, மும்பை, புனே, பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த நெருக்கடியாக சூழல் நிலவுகிறது.