வணிக வரி - பத்திரப் பதிவுத் துறை அறிவிப்புகள் 
தமிழ் நாடு

சனிக்கிழமைகளில் கட்டாயப்பணி முறை கைவிடப்படும்!

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று வணிக வரி - பத்திரப் பதிவுத் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம்:

1) பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கிட ஒரு வருவாய் கிராமத்தை முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டுவரும் வகையில் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைகள் மறுசீரமைக்கப்படும்.

2) மேம்பட்ட பதிவுச் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிட நவீன உட்கட்டமைப்புடன் கூடிய 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்படும்.

3) பதிவுத்துறை மென்பொருளின் செயல்திறன், பாதுகாப்பினை மேம்படுத்திட தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் நியமிக்கப்படும்.

4) ஏ.பி.ஐ. மூலம் இறப்பு, வாரிசுரிமைச் சான்றிதழ்கள் நிகழ்நேரத்தில் சரிபார்த்து போலி ஆவணப் பதிவுகள் தடுக்கப்படும்.

5) வரும் 15.09.2026 முதல் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெறும் போது உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, ரசீது ஆவணங்கள், நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை செய்வது கட்டாயமாக்கப்படும்.

6) தமிழகத்தில் பதிவாகும் ஆவணங்களின் தரவுகள், வழிகாட்டி மதிப்புகளைப் பகுப்பாய்வு செய்ய, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தரவு பகுப்பாய்வு மையம் நிறுவப்படும்.

7) வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாள்களில் மட்டும் செயல்படும்.இதனால், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram