தமிழ்நாடு காவல்துறை 
தமிழ் நாடு

காலணியால் தாக்கிய டிஐஜி- கண்டனம் வலுக்கிறது!

Staff Writer

அமைச்சுப் பணியாளரைத் தாக்கிய காவல்துறை உயர் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளர் ஒருவர் மீது டி.ஐ.ஜி விஜயலட்சுமி என்பவர் தனது காலணியை எடுத்து வீசியும், காலணியால் பலமுறை தாக்கியதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. காவல்துறை உயர் அதிகாரியின் இந்த சட்டவிரோத மனித உரிமை மீறல் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அமைச்சுப் பணியாளர்கள் இ-ஆபிஸ் நடைமுறையில் ஒரு கோப்பை உயர் அதிகாரிகளுக்கு கணிணி வாயிலாக அனுப்பும் போது அதற்கான எண்கள் தரப்படும். அந்த வகையில் அமைச்சுப் பணியாளர் டி.ஐ.ஜி. விஜயலட்சுமிக்கு ஒரு கோப்பை அனுப்பி அதற்கான எண்ணை தந்துள்ளார். அப்போது அந்த எண் தனக்கு ராசியல்லை என்று கூறி தனது காலணியை எடுத்து அமைச்சுப் பணியாளரை பல முறை தாக்கியுள்ளார்.  சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க வேண்டிய காவல்துறையின் உயர்அதிகாரி மனித மாண்புகளை அவமதித்தும், சட்டத்திற்கு விரோதமாகவும், அறிவியலுக்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை இயக்குநரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, அமைச்சுப் பணியாளரை காலணியால் தாக்கிய டி.ஐ.ஜி. விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அமைச்சுப்பணியாளருக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், தமிழ்நாடு காவல்துறையில் இதுபோன்ற அதிகார அத்துமீறல் இனி நடைபெறாமல் தடுக்கவும், காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கும் உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஊழியர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.”

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: 

”தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவு தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர் ஒருவர் மீது காவல்துறை துணை இயக்குநர் விஜயலட்சுமி காலணி வீசி தாக்குதல் நடத்தி அநாகரிகமான குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

உயர் அதிகாரியின் உத்தரவுப்படி அமைச்சுப் பணியாளர் மின் அஞ்சல் வழியாக அனுப்பும் கோப்புக்கு, அமைச்சுப் பணியாளர் அடையாள எண் கொடுத்துள்ளார். அந்த எண் எனக்கு ராசி இல்லாத எண் என்று ஆத்திரத்திரத்துடன் அமைச்சுப் பணியாளரை காலணியில் பல முறை தாக்கியிருப்பது, காவல் துறையில் நிலவும் நிலபிரபுத்துவ மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பணியாளர்களிடம் உயர் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல் நிர்வாகம் தொடர்பான பல ஆணையங்கள் ஏராளமான பரிந்துரைகள் வழங்கியுள்ளன. அவைகள் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும். மனித உரிமையை அத்துமீறியுள்ள காவல் துறை உயர் அதிகாரி மனித மாண்புக்கும் தீராக்களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து, பணியிடை நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதுடன் அவரது தாக்குதல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறது.”