விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் முதன்மை செயலாளருமான ஏ.சி. பாவரசு மறைவுக்கு தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கட்சியின் மூத்த முன்னோடியும் முதன்மை செயலாளருமான தம்பி ஏ.சி. பாக்கியம் என்கிற ஏ.சி. பாவரசு அவர்கள் இன்று விடியற்காலை இயற்கை எய்திய தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்குச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரைப் பார்த்தேன். மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு குருதியில் கலந்துள்ள உப்பை நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது பற்றியும், இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகளின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும், அவர் உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பது பற்றியும் மருத்துவர்கள் என்னிடத்தில் விளக்கினர்.
இந்நிலையில், அவரைக் காப்பாற்றுவது கடினம் என்பதை அறிந்தேன். அதனால் மென்மேலும் வேதனை மிகுந்தது. அங்கிருந்து என்னால் நகர இயலவில்லை. எனினும், என்னை நானே தேற்றிக்கொண்டு பாவரசிடம், "தைரியமாக இருங்கள் ; மீண்டு வந்து விடுவீர்கள்" என்று கூறினேன். அப்போது அவர் மெல்ல தலையசைத்தார். என்னிடம் ஏதோ பேச முயன்றார்; ஆனால், அவரால் இயலவில்லை. பின்னர், அவரது மகள் மற்றும் உறவினர்களிடம் நான் ஆறுதலாகப் பேசிவிட்டு விடைபெற்றேன்.
எப்படியும் நலம்பெற்று வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில், இடி விழுந்ததைப் போல இப்படியொரு செய்தி இன்று அதிகாலையில் வந்து சேர்ந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து எப்படி மீளுவேன்; என்னை நானே தேற்றிக் கொள்வேன் என்று எனக்குத் தெரியவில்லை.
1990-களின் தொடக்கத்திலிருந்து என்னோடு பயணித்தவர்களுள் ஒருவர் தம்பி பாவரசு. என்னையும் இயக்கத்தையும் ஆழமாக நேசித்தவர். ஓய்வின்றி உழைத்த போராளி. கட்சிப் பணிகள் மட்டுமே அவரது முழுநேரப் பணிகள். என்னோடு கடந்த 35 ஆண்டுகளாகச் சுற்றிச் சுழன்று தமிழ்நாடு முழுவதும் களமாடியவர்.
மறைந்த தோழர் உஞ்சை அரசன் அவர்களும் இவரும் 'இரட்டையராக' இருந்து அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்து இயக்கத்தை முறைப்படுத்தும் பணிகளை ஆற்றியவர்கள். எனக்கு உற்றத்துணையாக இருந்து இயக்கப் பணிகளைப் பகிர்ந்து கொண்ட இருவருமே இன்று இல்லை என்பது எனக்கு நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
தம்பி பாவரசு அவர்கள், 1991-இல் மதுரை அழகர் திருவிழாவில் 'தண்ணீர் பீய்ச்சும்' ஒரு பக்தராக எனக்கு அறிமுகமானார். அதன் பின்னர் அந்த நிலையிலிருந்து முற்றாக மாறி, முழுநேர சிறுத்தையாகப் பரிணாமம் பெற்று, கட்சியில் படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்து இன்று முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு உயர்ந்தார்.
அவர் பயணிக்காத மாவட்டம் இல்லை; சந்திக்காத பொறுப்பாளர்கள் இல்லை என்கிற அளவுக்கு அவரது களப்பணிகள் அமைந்தன. உட்கட்சி முரண்களைச் சரிசெய்வது உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் தானே முன்வந்து தலையிட்டு தீர்வுக் காண்பதில் அக்கறை செலுத்தியவர். மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போதெல்லாம் முழுமையாக என்னோடு இருந்து இரவு பகல் கண்துஞ்சாமல் பணியாற்றியவர்.
தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு மகத்தானதாகும். கடந்த சில மாதங்களாக உடல்நலம் சீராக இல்லாத நிலையிலும் இயக்கத்தின் மறுசீரமைப்புக்கான பணிகளை ஆற்றுவதில் எனக்குப் பெருந்துணையாக இருந்தார். ஓய்வெடுக்க சொல்லியும் அதனைப் பொருட்படுத்தாமல் எனக்கு உடனிருந்து உதவியவர்.
எனக்கு எந்த நெருக்கடியும் தராமல் கட்சியின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி தன்னால் இயன்ற அளவில் மக்கள் பணியாற்றியவர். அவரது இழப்பு ஈடுசெய்ய இயலாத மிகப்பெரும் இழப்பாகும். நன்றி பெருக்கோடு அவருக்கு எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்து வாடுகிற அவரது மகள் செந்தமிழ் நிலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.