பொருள்களின் விலைகளை உயரும் 
தமிழ் நாடு

யுபிஐ... மக்களுக்கு பாதிப்பு வரும் : அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

Staff Writer

வணிகர்களையும், மறைமுகமாக மக்களையும் பாதிக்கும் யு.பி.ஐ. பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை:

”அக்டோபர் 15 முதல் ரூபாய் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்பொழுதும் போல இலவசமாக வழங்கப்படும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.

இது அதிர்ச்சி அளிக்கிறது. வர்த்தகர்களுக்கு மட்டுமே இக் கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் கூட, ரயில்வே, தொலை தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரிமியம், மின்சாரம், தண்ணீர் பயன்பாடு போன்றவற்றிற்கான கட்டணங்களுக்கு, அக்கட்டணம்  ரூபாய் 2000 க்கு மேல் இருந்தால், அதற்கு ரூபாய் 5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இக்கட்டணம்  படிப்படியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இக்கட்டண வசூல் பொதுமக்களை நேரடியாக கடுமையாக பாதிக்கும்.

வர்த்தகத்திற்கு யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை நடைமுறை படுத்தினால், அந்தக் கட்டணச் செலவும், பொருட்களின் மீதே ஏற்றப்படும். அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும்.   

யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது, இச்சேவையை வழங்கிவரும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்குமே, நிதி மூலதனத்திற்குமே சாதகமானதாகும்.

அவற்றின் லாப வேட்கைக்கு இரை போடுவதாகவே அமையும்.

ஒன்றிய பாஜக  அரசு இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதும், சாதாரண மக்களுக்கு எதிராக செயல்படுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது.

எனவே, உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”

பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை:

"இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே உட்பட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.300-ம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால், தனிநபர்களுக்கு எந்த வகையிலும் நேரடியாக பாதிப்பு இல்லை. மாதம் ரூ.1 லட்சம் வரை யு.பி.ஐ. மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு இல்லை.

ஆனால், இந்த முறையில் பொதுமக்கள் தான் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள். பெரு வணிகர்கள் ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்சமாக ரூ.300 வரை பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு இலாபம் குறைவதை அனுமதிக்க மாட்டார்கள்.

மாறாக, பொருள்களின் விலைகளை உயர்த்தி, இந்தக் கட்டணத்தை மறைமுகமாக பொதுமக்கள் மீது தான் சுமத்துவார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரம் இதனால் மேலும் அதிகரிக்கும்.

இந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை மூலம் கணிசமான அளவில் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டு, வெளிப்படையான பணப் பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள இலாபத்துடன் ஒப்பிடும் போது, இந்த சேவையை இலவசமாக வழங்குவதால் ஏற்படும் இழப்பு பெரிதல்ல.

எனவே, ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

வெளிப்படையான பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்."

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram