நயினார் நாகேந்திரன் 
தமிழ் நாடு

ரஜினிகாந்த் குறித்து சர்ச்சை பேச்சு... ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Staff Writer

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கடணம் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியலுக்கு வர நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால், திமுக குடும்பம் அவரை மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. இன்று என்ன ஆனார்? ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனத்திலேயே நடிக்க போய்விடார்.” என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்க திமுகவும் ரஜினி ரசிகர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், நமது பிரதமர் நரேந்திர மோடியின் மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.

அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்!

பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.