முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 
தமிழ் நாடு

அம்பேத்கர் குறித்து சர்ச்சைப் பேச்சு… அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

Staff Writer

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இரண்டு நாள் விவாதத்தின் முடிவில், நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது சமூக ஊடக பக்கத்தில், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.