தமிழ் நாடு

ஊழல் வழக்கு, ஜெயலலிதா – தவெக செங்கோட்டையன் சொன்ன பதில்!

Staff Writer

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஜெயலலிதா ஊழல் வழக்கு குறித்து பதிலளித்துள்ளார்.

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளம் காணப்பட்டவன் நான். 1975இல் கோவையில் பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக என்னை கட்டித்தழுவி பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக அமர்ந்தார். அந்த தலைவர் மறைந்ததும் இயக்கம் இரண்டாக பிரிந்தது. அப்போது ஜெயலலிதாவின் வழியில் பயணித்தேன். சுற்றுப் பயணங்களின் போது அவருடன் பயணித்துள்ளேன். எந்த ஒரு சூழலிலும் கட்சிக்கு விசுவாசமிக்க தொண்டனாக இருந்தேன்.

நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக் கொள்வான். இதுதான் இன்றைய சூழல். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி மூன்றாக உடைந்தது. தேவர் ஜெயந்தி நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று தான் சென்றிருந்தேன். ஆனால் அடுத்த சில நாட்களில் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்.

50 ஆண்டுகள் கட்சியில் இருந்த எனக்கு கிடைத்த பரிசுதான் பதவி பறிப்பு. தெளிவாக முடிவெடுத்துவிட்டுத்தான் நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். இன்று தவெகவில் இணைந்தேன்.

அதிமுக – திமுக இரண்டுமே ஒன்றுதான். இரண்டும் இணைந்துதான் பயணிக்கின்றன. எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான அட்சி தமிழகத்தில் மலர்வதற்காக தவெகவில் இணைந்துள்ளேன். விஜய் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார்.

இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டி போட்டுக் கொண்டிருக்க கூடாது. 3ஆவதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். இளவல் விஜய் வெற்றி பெறுவார். 2026இல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.

திமுகவோ, பாஜகவோ அல்லது மற்ற கட்சிகளோ என்னை சந்தித்துப் பேசவில்லை. நானும் சேகர்பாபும் சந்தித்து பேசியது தொடர்பாக புகைப்படங்கள் வந்துள்ளாதா? இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள்.” என்றவரிடம், எடப்பாடி அமைச்சரவையில் இருந்துள்ளீர்கள். அந்த ஆட்சி தூய்மையான ஆட்சியாக இல்லையா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “தூய்மையான ஆட்சி நடந்ததா இல்லையா என்பதற்கான பதில், ஆளுநரிடம் மனு கொடுத்து யார்? நானா கொடுத்தேன்? எதிர்க்கட்சி தானே கொடுத்தது.” என்றார்.

நீதிமன்றம் சொல்லியிருக்கிறது ஜெயலலிதா ஏ1 குற்றவாளி என்று. அப்படியிருக்கும் போது செங்கோட்டையனை எப்படி தவெகவில் இணைத்துக் கொண்டீர்கள்? ஊழல் இல்லாதை ஆட்சி அமைப்போம் என்று சொன்னீர்களே? என்று செய்தியாளர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது வேறு. அவர் தூய்மையானவர். நீதிமன்றத்தில் சொன்னது வேறு. அவர் நடந்து கொண்ட முறைகள் வேறு. ஒரு வழக்கை எப்படி வேண்டுமானாலும் ஜோடிக்கலாம். அரசு நினைத்தால் எதை வேண்டும் என்றாலும் செய்யும். ” என்றார்.