எஸ்.ஐ.ஆர். 
தமிழ் நாடு

ஒன்றிய ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - சி.பி.ஐ.

Staff Writer

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

"இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடியை, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்திய புலனாய்வு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனம், அதன் ஊடகவியலாளர் ரித்திகா சோப்ராவின் பணியை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்துவும், விவேக் ஜோஷியும் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்காளர் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் சட்டவிரோதமான, அனுமதியற்ற மாற்றங்கள் செய்தல், தேர்தல் வாக்காளர் பட்டியல் மென்பொருளை மையப்படுத்துதல் உட்பட்ட முடிவுகளுக்கு அவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான கட்டுப்பாடுகள் மையப்படுத்தப்படுவது குறித்து அவர்கள் மத்திய அமைச்சரவைச் செயலாளரிடமும் முறையிட்டுள்ளனர்.

ஆனால் இந்த ஆட்சேபணைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் விளைவாக, பல்வேறு மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய ஆளும் கட்சியான பா.ஜ.க. தனது ஆதரவாளர்களை மட்டும் வாக்காளர்களாக நீடிக்க தேர்தல் ஆணையம் மூலம் அனுமதிப்பதும், அதற்காக தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றுவதும் கண்டனத்திற்குரியது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மையக்கருவியாக செயல்பட்டுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவுகளையும், அவை எடுக்கப்பட்ட விதத்தையும் உச்சநீதிமன்றம் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த நெருக்கடியை, 2013ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையில் செய்த மாற்றங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் 2023 மூலம் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகப் பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

அந்த மாற்றம் ஜனநாயக நிறுவனமான தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையை பலவீனப்படுத்திவிட்டது. ஒன்றிய ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாற வழிவகுத்துவிட்டது. இந்த மாற்றம் ரத்து செய்யப்பட்டு, பழைய முறையே கடைபிடிக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு, கடமை மிகவும் தெளிவான ஒன்றாகும். வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதே அதன் கடமையாகும் எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கடமையை கைவிடக்கூடாது. அதை உறுதி செய்ய வேண்டும்.

உடனடியாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை பறித்து, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நடத்தியமைக்கும், சீர்குலைத்தமைக்கும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்." என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram