இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தவர் சி.மகேந்திரன் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
சிபிஐ கட்சியின் மாநிலத் துணைச்செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய சி.மகேந்திரன், அக்கட்சியின் கலை இலக்கிய அமைப்பின் தலைவராகவும் இருந்துவந்தார். தாமரை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் அவர் நெடுங்காலம் செயல்பட்டுவந்தார். பல ஆண்டுகளாக கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த நிலையில், திடீரென நம்மாழ்வார் பெயரில் ஓர் இயக்கத்தையும் அவர் தொடங்கினார். அதே வேகத்தில் நேற்று விஜய்யின் த.வெ.க.வில் அவர் சேர்ந்தது, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான பேர் மகேந்திரனின் இச்செயல்பாடு குறித்து அதிர்ச்சியுடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டவண்ணம் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அவரைப் பற்றி சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கை மேலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. கட்சியில் இருந்து தொடர்பு இல்லாமல் இருந்த மூத்த தலைவர் குறித்து இப்படி ஒரு விளக்க அறிக்கை தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்துவந்த சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர்.
சமீப காலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.
குறிப்பாக, கட்சியின் ஆரம்ப கால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தைக் குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயார் செய்திருந்திருந்தனர்.
அத்தகைய மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார். எனவே, சி.மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருந்துவந்தார்.
சி.மகேந்திரன் தனது தவறுகளைக் களைந்துகொண்டு கட்சியுடன் தன்னைப் பொருத்திக்கொள்ள கட்சி கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்.
சி.மகேந்திரனின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.