ஆளுநர் மாளிகைக்குப் பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்தும் முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை :
” நேற்றைய தினம் ஆளுநர் ஆர். வி.அர்லேகர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசியபோது, மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வுகாண ஆளுநர் மாளிகையை அணுகலாம். அவர்களது கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் எனப் பேசியிருப்பதும், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்பவர்கள் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையில் முறையிடலாம் என்று பேசியிருப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்.
ஆளுநரின் இந்தச் செயல் மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடும் அதிகார அத்துமீறலாகும்.
ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் தடுத்து நிறுத்த உடனடியாக, சட்ட நடவடிக்கைகளையும் அரசியல்ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில், தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப் போராட்டத்தில் ஆளுநர் அதிகாரம் குறித்து தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறுத்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புப் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகார எல்லையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்படும் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த, குடியரசுத் தலைவர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மு. வீரபாண்டியன் கூறியுள்ளார்.